பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீப காலமாக, பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில், ஆசிரியர்களே ஈடுபடுவது தான், அதிகமாக நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக, அதிகபட்ச தண்டனையாக, சஸ்பெண்ட் இருக்கும். ஆனால், தற்போது, சம்பந்தபட்ட ஆசிரியரை, டிஸ்மிஸ் செய்வது, அவரின், கல்வி சான்றிதழ்களை ரத்து செய்வது என, கடும் நடவடிக்கைகள், எடுக்கப்படுகின்றன.
அரசு உத்தரவு விவரம் :தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள், பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு பெண்கள் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர் பணியிடம் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகளை மட்டுமே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, கல்வித்துறைக்கு, தமிழக அரசு உ த்தரவிட்டுள்ளது.
அதேபோல், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாணவர், மாணவியர் என, இரு பாலர் பயிலும் பள்ளிகளாக இருந்தால், அங்கு, ஆசிரியைகளுக்கு, முதலில், முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக அரசு, அறிவுறுத்தி உள்ளது.
இதன்மூலம், பள்ளி வளாகங்களில், பாலியல் குற்றங்களை, முழுமையாக தடுக்க முடியும் என, தமிழக அரசும், கல்வித்துறையும் நம்புகிறது. தமிழக அரசின் உத்தரவு குறித்த தகவல், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அரசின், புதிய நடவடிக்கையால், ஏதாவது குழப்பங்கள் வர, வாய்ப்பு இருக்கிறதா என, அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: நடைமுறை ரீதியாக, எந்த சிக்கலும் வர, வாய்ப்பு இல்லை. ஆசிரியர் பணிபுரியும் இடத்தில், ஆசிரியை பணிபுரிவார்; அவ்வளவு தான்.
பெண்கள் பள்ளிகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவு தான். அதேபோல், ஆண்கள் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவு தான். இந்த இரு பள்ளிகளின் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும். இரு பாலர் பயிலும் பள்ளிகள் எண்ணிக்கை தான், அதிகமாக உள்ளன.
இனிமேல், ஆசிரியரை பணி நியமனம் செய்யும்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போதோ, புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு, தெரிவித்துள்ளது. எனவே, ஏற்கனவே, பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தற்போது, எந்த பாதிப்பும் வராது.
இனிமேல், புதிதாக பணி நியமனம் செய்யும்போது, ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் தேர்வில், ஆசிரியைகள் தான், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 20 ஆயிரம் ஆசிரியர், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில், ஆண் ஆசிரியர் எண்ணிக்கை, 5,000 வரை தான் இருக்கும். 15 ஆயிரம் பேர், பெண்கள் தான். எனவே, அரசின் உத்தரவை அமல்படுத்துவதில், எவ்வித சிக்கலும் வராது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.