Sunday, April 14, 2013

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.


அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது, ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?


20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது, ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

முதல் தேர்வு: கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.கடினமான கேள்வித்தாள், குறைவான நேர ஒதுக்கீடு ஆகியவற்றால் திணறிய தேர்வர்கள், டி.ஆர்.பி., மீது சரமாரி புகார் தெரிவித்தனர். இதனால், அக்., 14ம் தேதி நடத்திய இரண்டாவது டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளில் கடினத்தை குறைத்ததுடன், தேர்வுக்கான நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக உயர்த்தியது.

இரண்டாவது தேர்வில் ஆறுதல்:@@இதன் காரணமாக, தேர்ச்சி, 3 சதவீதமாக அதிகரித்தது. 6.56 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மற்றும் இரண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு டிசம்பரில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அடுத்த தேர்வு எப்போது? எனினும், இன்னும், 20 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் மே மாதத்திற்குள் நடத்தி முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், புதிய ஆசிரியர்கள், பணியில் சேரும் வகையில், முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.,யின் மெத்தனம் காரணமாக, இத்திட்டம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.தேர்வர்களும், அடுத்த டி.இ.டி., தேர்வை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினமும், ஏராளமான தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), விசாரித்தபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., தரப்பில், எவ்வித தகவலும் தரப்படவில்லை.
டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் தேதிக்கும், தேர்வு நடக்கும் தேதிக்கும், குறைந்தபட்சம், இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும் வகையில், தேர்வு அட்டவணையை நிர்ணயிப்போம். ஜூன், அல்லது ஜூலையில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என, தெரிவித்தன.

மாணவர்களுக்கு பாதிப்பு: இரண்டாவது தேர்வு நடந்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. மே மாதத்தில் தேர்வை நடத்தி, விரைவாக முடிவை வெளியிட்டுருந்தால், புதிய ஆசிரியர்கள், பள்ளியில் சேர வசதியாக இருந்திருக்கும். ஜூலைக்குப் பின், தேர்வை நடத்தினால், அவர்கள், பணியில் சேர்வதற்குள் அரையாண்டு தேர்வே வந்துவிடும். இதனால், கல்வி ஆண்டு துவங்கி, முதல் ஆறு மாதங்கள், ஆசிரியர் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட தேர்வை, டி.ஆர்.பி., விரைவாக வெளியிட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17

இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34

தெரிந்த நெட்வொர்க் ..தெரியாத பல விசயம்