பத்தாம் வகுப்பு தேர்வு நிலவரம்
தமிழகத்தில் நடந்த, எஸ்.எஸ்.எல்.ஸி., தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், மாதிரி படிவம் தராமல் ஏற்பட்ட குளறுபடிக்கு, அனைத்து மாணவர்களுக்கும், ஐந்து மதிப்பெண் முழுமையாக வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.ஸி., தமிழ் இரண்டாம்தாள் தேர்வு இன்று நடந்தது. இதில், வழங்கப்பட்ட வினாத்தாளில், 38வது வினாவாக, "வங்கிப்படிவத்தை பூர்த்தி செய்து, விடைத்தாளுடன் இணைக்கவும். பெயருக்கு பதில் பதிவெண்ணை எழுத வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், எங்குமே வங்கிப்படிவம் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்களிடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. தேர்வறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, அவர்களும், "தெரியாது' என்றே பதில் அளித்தனர். மாவட்டக்கல்வி அலுவலர் வரை, இதே பதில் கிடைத்ததால், பலரும் அந்த வினாவுக்கு விடையளிக்கவில்லை.
இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
வினாத்தாளில் குறிப்பிடப்பட்டபடி வங்கிப்படிவம் எங்குமே வழங்கப்படவில்லை. இதனால், அந்த வினாவுக்கு பதில் தெரிந்தும், எந்த மாணவர்களாலும் பதில் எழுத முடியவில்லை. தமிழகம் முழுவதும் படிவம் வழங்காமல், இந்த குளறுபடி நடந்துள்ளது. இதனால், அவ்வினாவுக்கு முயற்சித்த அனைவருக்கும் வினாவுக்குரிய, ஐந்து மதிப்பெண் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பெரும்பாலான மாணவர்கள் படிவம் இல்லாததால், குழப்பம் அடைந்து, அந்த வினாவை எழுதாமலேயே வந்துள்ளனர். இதற்கு காரணம், வினாத்தாளில் கூறியபடி படிவம் வழங்காததே. இதனால், அந்த வினாவை முயற்சித்த மற்றும் முயற்சிக்காத என, அனைத்து மாணவர்களுக்கும், ஐந்து மதிப்பெண் கட்டாயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment