Saturday, December 7, 2013

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்

வாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கிவரும் கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் அதற்கு உதாரணம். இங்கு ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இருவர், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் சுப்பிரமணியத்தை வகுப்பறையில் வைத்தே புரட்டி எடுத்துள்ளனர்.

தாடை எலும்பு முறிந்து, முன்பற்கள் இரண்டு உடைந்து, காது சவ்வு கிழிந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சுப்பிரமணியத்திடம் பேசியனோம், ''சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம்தான் எனக்கு சொந்த ஊரு. எம்.காம்., பி.எட். படிச்சிருக்கேன். கடந்த மூணு வருஷமா பல்லடத்தில் இருக்கிற இந்தப் பள்ளியில வணிகவியல் ஆசிரியரா வேலைபார்த்து வர்றேன். டிசம்பர் 2-ம் தேதி அன்னிக்கு மதியம் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கிட்டு இருந்தேன். எல்லா மாணவர்களும் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வந்து பாடத்தைக் கவனிச்சாங்க. அந்த ரெண்டு பேரும் லேட்டா வகுப்புக்கு வந்தாங்க. அதை நான் கண்டிச்சேன். உடனே கோபப்பட்ட ரெண்டு பேரும் அவங்க கையில் வெச்சிருந்த பரீட்சை அட்டையாலும், கைகளாலும் மாறி மாறி என் முகத்துல தாக்கினாங்க. இதில் பலத்த அடிப்பட்டு முகத்தில் ரத்தம் வழிய மயக்கம்போட்டு விழுந்திட்டேன். அப்புறமா மத்த ஆசிரியருங்கதான் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்து சேர்த்தாங்க. தாடை எலும்பு, காது சவ்வு, முன்பற்கள் எல்லாம் பலத்த அடிபட்டிருக்கு.. குருவா மதிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லாம போச்சுங்க'' என்று கண்கள் கலங்கினார் சுப்பிரமணியம்.

கணவரின் கண்களைத் துடைத்தபடி பேசினார் அவரின் மனைவி கோகிலா. ''இவருக்கு இந்தப் பள்ளிக்கூடத்துல நல்ல பேரு. சின்சியரா பாடம் நடத்தியதால், போன வருஷம் நல்ல ரிசல்ட் கிடைச்சது. அதனால இவருக்கு புரமோஷனும்கூட கொடுத்தாங்க. அப்படிப்பட்ட நல்ல ஆசிரியருக்கு இதுதான் தண்டனையா? பள்ளிக்கூட நிர்வாகம் மாணவர்கள் மேல காட்டும் அக்கறையை, ஆசிரியர்கள் மீது துளியும் காட்டுவது இல்லை. 'நாங்க கொடுக்கிற ஃபீஸுலதானே நீ சம்பளம் வாங்குற... அப்புறம் எதுக்கு எங்களைக் கேள்வி கேட்குற?’ன்னு சொல்லி அடிசிருக்காங்க. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இங்கு நிலவுது. என்னதான் தப்பு செஞ்சாலும் மாணவர்களுக்கு சப்போட்டாத்தான் பள்ளி நிர்வாகத்துல இருக்காங்க. இந்த வியாபாரத்துக்கு அவங்கதானே மூலதனம்'' என்றார் காட்டமாக.
பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், ''ஆசிரியர் சுப்பிரமணியத்தைத் தாக்கியது, ஆபாசமாகத் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளில் சம்பந்தப்பட்ட  மாணவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்யவில்லை'' என்றார்.
கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கிருஷ்ணன், ''இதுபோன்ற சம்பவம் இதுவரை எங்கள் பள்ளியில் நடந்ததே இல்லை. இது யதேச்சையாக நடந்துவிட்ட ஒன்று. ஆசிரியர்களும் மாணவர்களும் இணக்கமுடன்தான் இருந்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்றார் சுருக்கமாக.
'சென்னையில் ஆசிரியை குத்திக்கொல்லப்பட்டது, பாளையங்கோட்டையில் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொல்லப்பட்டது... என்று சமீப காலங் களாக  மாணவர்கள் செய்யும் வன்முறை அதிகரித்து வருகிறதே?’  என்ற நம் கேள்விக்கு, திருப்பூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் நம்மிடம்,
''கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரமாகப் பார்க்கப்படுகிறார்கள். இந்தக் கல்வி வியாபாரிகளுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். படி, படி என்று விடுமுறை நாட்களில்கூட சிறப்பு வகுப்புக்களை நடத்தி அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அவர்கள் பங்குக்கு தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இதன் விளைவு... குழந்தைகள் மன அழுத்தம் கொண்டவர்களாக மாறுகின்றனர். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற வடிகால் தருகின்ற வகுப்புக்கள் இந்த மாதிரிப் பள்ளிகளில் அறவே இல்லை. போதாக்குறைக்கு தனியார் பள்ளிகளே புதுப்புது பாடத்திட்டங்களைப் புகுத்தி கூடுதல் சுமையை மாணவர்களுக்குக் கொடுக்கின்றன. அந்த மன அழுத்தக் கோபத்தை அவன் ஆசிரியர்கள் மீது காட்டுகிறான். ஆசிரியர்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்து ரிசல்ட் கொடுக்கச் சொல்லி இந்தத் தனியார் பள்ளிகள் வறுத்து எடுக்கின்றன. அவர்களும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படிப்பட்ட தாக்குதல்கள். சமச்சீர் கல்வி முறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான தீர்வு'' என்றார் ஆணித்தரமாக.
எழுத்தறிவித்தவன் பகைவன் ஆவான் என்று மாற்றி வாசிக்க வேண்டிய காலம் வரும் போலும்!

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மொபைலில் "டிப்ஸ்"

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தி கொள்வதற்கான யுத்திகள், ஆலோசனைகள், மொபைல் போன் மூலம் வழங்கப்பட உள்ளன.


இதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இத் திட்டம், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மேற்கு வங்க ஆரம்ப பள்ளி வாரியம் கூட்டாக இணைந்து நடத்துகிறது.

உண்மைத்தன்மை (Genuinenity) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000


8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.