Thursday, April 25, 2013


அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்

சென்னை: வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.
இலவச கணித உபகரண பெட்டி வழங்கும் திட்டம், கடந்த கல்வி ஆண்டில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1 முதல் பிளஸ் 2 வரை, புத்தகப் பை; 1 முதல் 5ம் வகுப்பு வரை, கலர் பென்சில்கள்; 6 முதல் 10ம் வகுப்பு வரை, அட்லஸ் வழங்குவது ஆகிய திட்டங்களும், புதிதாக அறிவிக்கப்பட்டன.
இந்த நான்கு திட்டங்களுக்காக, கடந்த நிதி ஆண்டில், 136 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவழித்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மேற்கண்ட இலவச திட்டங்களை செயல்படுத்த, 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
டெண்டர் விண்ணப்பங்கள், நேற்று முதல், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. "மே, 23ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள், மே, 24ம் தேதி, பிற்பகல், 2:00 மணி வரை பெறப்படும்&' என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும், 3.50 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.

தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்த தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வரும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தகவல்.

தொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இடமாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.முருக செல்வராஜன் தெரிவித்தது, “பள்ளி வேலை நாட்களுள் கலந்தாய்வு குறித்து அறிவித்தால் தான் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அளிக்க ஏதுவாக இருக்கும். இதுவரை அறிவிப்பு ஏதும் வராததால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடக்கக்கல்வித் துறை இயக்குனருக்கு இதுகுறித்து வலியுறுத்தி கடிதம் அளித்ததோடு நேற்று மாலையும் இன்று காலையும் தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் தொலைப்பேசி வாயிலாக பேசுகையில், கல்வித்துறை அமைச்சர் மற்றும்  கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் ஆலோசித்து விட்டு இன்று (26.04.2013) மாலைக்குள் இது குறித்து உறுதியான தகவலை தருவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி, அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.
அதனால் இவற்றைத் தலைமையாசிரியரோ பிற ஆசிரியர்கள் சேர்ந்தோ தமது பொறுப்பில் வைத்திருந்துவிட்டு கோடைவிடுமுறை முடிந்து பள்ளி மறுதிறப்பு நாளன்று மாணவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்துகொள்ளவும். ஏற்கனவே ஒருசில பள்ளிகளில் கோடை விடுமுறையில் மடிக்கணினி களவு போனதும் அப்பள்ளித் தலைமையாசிரியர் பணிநிறைவு பெற்ற பின்னரும் அப்பிரச்சினை அவருக்குத் தீராத தலைவலியாக இருந்ததும் நாளிதழில் வெளியானதாக நாம் அறிந்துள்ளோம்! ஆகவே பள்ளியின் முக்கியத் தளவாடங்களையும் உபகரணங்களையும் பாதுகாப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கில திறமையை சோதிக்க தேர்வு

மாணவன் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியருக்கு ஊதிய உயர்வு ரத்து




eசென்னை : 

மாணவனுக்கு தமிழ், ஆங்கிலப்புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அதிகபட்ச தண்டனையாக ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் ஏராளமான ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், வேலை கிடைத்த ஆசிரியர்களின் நிலைமை அதைவிட பரிதாபமாக உள்ளது. கல்வி தரத்தை உயர்த்தும் எண்ணத்தில் அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியதுதான். ஆனால், அரசு பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கல்வியை தரம் உயர்த்த முயல் வது இயலாத காரியம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

இந்த கோடை விடுமுறையையாவது சந்தோஷமாக கழிக்கலாம் என்று கருதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வரும் 2013,14ம் கல்வி ஆண்டில் ‘பேஸ் லைன் சர்வே’ என்ற கணக்கெடுப்பை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நடத்தப்படவுள்ளது.

மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன், கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அடங்கிய தேர்வு, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வைக்கப்படவுள்ளது. இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதிகபட்ச தண்டனையாக ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் ‘கை’ வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை வரும் கல்வி ஆண்டில் அதிகரிக்க, கல்வித்துறையில் அரசு செய்து வரும் இலவச சீருடை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பெற்றோரிடம் கூற வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு சுத்தமாக வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித்துறையின் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தலைமை ஆசிரியர்களையும். ஆசிரியர்களையும் கதி கலங்க வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்வித்துறை உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட  அறிவிப்புகளை தற்போது, மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

Transfer Application


Transfer Application | தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின்  மாறுதல் படிவம்