Sunday, May 19, 2013


                   இன்ஜி., விண்ணப்பங்கள் அனுப்ப வசதியாக தலைமை தபால்                                                                                      அலு வலங்கள் இன்று திறப்பு


சென்னை அண்ணா இன்ஜி.,கல்லூரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வசதியாக, சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள தலைமை தபால்துறை அலுவலகங்களில் இன்று(19ம் தேதி) விரைவு தபால்கள் மட்டும் புக்கிங் செய்யப்படுகிறது.

சென்னை அண்ணா இன்ஜி.,கல்லூரிக்கு கவுன்சிலிங் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இன்ஜி.,படிக்க விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். எஸ்.சி.,எஸ்.டி.,மாணவர்களுக்கு ரூ.250, மற்ற மாணவர்களுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20ம் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகள் தெரிந்து கொண்ட இன்ஜி.,படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் சென்னை அண்ணா இன்ஜி.,கல்லூரிக்கு தபால் துறை மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.
சில மாணவ, மாணவிகள் ஜாதிச்சான்றுகள், வருமானச் சான்றிதழ் மார்க்ஷீட் உள்ளிட்ட சில சான்றுகளை இணைந்து அனுப்ப வேண்டியது உள்ளதால் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்னைக்கு விண்ணப்பங்களை அனுப்ப இயலாத சூழ்நிலை நிலவுவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே சென்னை அண்ணா இன்ஜி.,கல்லூரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கு நாளை(20ம் தேதி) கடைசி நாளாகும். இந்த சூழ்நிலையில் இன்று(19ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தபால் அலுவலகம் விடுமுறை நாள். இதன் காரணமாக சென்னை தவிர பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப இயலாமல் போய்விடும். அல்லது சென்னைக்கு நேரில் சென்று கொடுக்கவேண்டும்.
இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க, தபால்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் முழுவதும் இன்று (19ம் தேதி) காலை 10 மணி முதல் ஒரு மணிவரை 3 மணிநேரம் மட்டும் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம் மட்டும் விரைவு தபால் (ஸ்பீடுபோஸ்ட்) புக்கிங் செய்வதற்கு தபால்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, இதுவரை சென்னை அண்ணா இன்ஜி., கல்லூரிக்கு கவுன்சிலிங் செல்வதற்காக விண்ணப்பங்களை அனுப்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தபால்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment