Monday, April 22, 2013

சிதிலமடைந்த கோளரங்க இருக்கைகள்; கண்டு கொள்ளுமா கல்வித்துறை?

சிதிலமடைந்த கோளரங்க இருக்கைகள்; கண்டு கொள்ளுமா கல்வித்துறை?


திருச்சி: கோளரங்கத்தில் விண்வெளி குறித்து அறிந்துகொள்ளும் விண் அரங்கத்தில் இருக்கைகள் கிழிந்தும், உடைந்தும் உள்ளதால், மாணவர்கள் அமர்ந்து கண்டு களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா அறவியல் கோளரங்கம் அமைந்துள்ளது. இந்த கோளரங்கில், விண்வெளியில் உள்ள கோளரங்கம் குறித்து சிறுவர், சிறுமியர், மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, "விண் அரங்கம்" என்ற சிறிய அளவிலான குளிரூட்டப்பட்ட (ஏசி) அறை உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பகலில் ஓர் இரவு என்ற அடிப்படையில், இந்த விண் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கத்துக்குள் அமர்ந்து வானத்தை பார்ப்பதுபோல, அன்னாந்து பார்த்தால், வானில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள் போன்றவை ஒளி மூலம் தெரியும்.
தொடர்ந்து, 25 நிமிடங்கள் விண்வெளி குறித்த காட்சி ஓடும். அடிப்படை வானியல் குறித்து விளக்கப்படும். சிறியவர்களுக்கு, 6, பெரியவர்களுக்கு, 12 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, சிறிய "3டி" (முப்பரிமானம்) தியேட்டர் உள்ளது. இதில், டைனோசர், ஆழ்கடல், மேஜிக், விண்வெளி, வொன்டர் லேன்ட், அனிமல் கிங்டம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படும். 10 ரூபாய் கட்டணம்.
விண்அரங்கத்துக்கு வரும் சிறுவர்கள், பார்வையாளர்கள், இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் சேதப்படுத்தி உள்ளனர். பல நாட்களாக இதை சரி செய்ய கோரி, கோளரங்க பணியாளர்கள் கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து கோளரங்க திட்ட இயக்குனர் அய்யம்பெருமாள் கூறுகையில், "கடந்த ஃபிப்ரவரி, மார்ச் மாதத்தில் அதிகளவு பார்வையாளர் வந்துள்ளனர். சிறுவர்கள் இருக்கைகளை கிழித்து விடுகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில், 10 ஆயிரம் பேர் வந்துள்ளனர். தற்போது விடுமுறை வர உள்ளதால், பார்வையாளர் அதிகளவு வருவர். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், ஓரளவு கூட்டம் குறைவாக இருக்கும். அப்போது அவை சரி செய்யப்படும்," என்றார்.
"விண் அரங்கை" சரி செய்ய, உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment